ஞாயிறு ஊரடங்கின் கடுமையான கட்டுப்பாடுகள் என்னென்ன!!

25 April 2021

இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும்  இன்று ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது. இந்த முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திருமணம், இறுதிச்சடங்கு சார்ந்த நிகழ்வுகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால் பொதுமக்கள் நேற்று அத்தியாவசிய பொருட்களை வாங்க மளிகைக்கடை, காய்கறிக்கடை இறைச்சிக்கடைக்களில் பெரும் கூட்டமாக குவிந்தனர். ஒரு சிலர் இன்று இறைச்சி கிடைக்காது என்பதால் உயிருடன் கோழிகளை வாங்கிச் சென்றனர்.

இதனிடையே இன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் போது தமிழகம் முழுவதும் 80,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

மேலும், வாகனங்களில் ஊர் சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், மாநில, மாவட்ட எல்லைகளில் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும்,  ட்ரோன் மூலம் சுற்றித்திரியும் நபர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.