இந்து கோயில் கட்டிடப் பணிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி!

25 December 2020

இந்து கோயில் கட்டிடப் பணிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், இந்து கோவில் ஒன்றின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும், இந்துக்களுக்கான சுடுகாடு அமைக்கவும் அங்குள்ள இந்து மக்கள் முயற்சி மேற்கொண்டனர். இதனையடுத்து, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலாக அமையவுள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு நிலம் ஒதுக்கினார்.

நவாஸ் ஷெரிஃப்பிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த இம்ரான் கான், கிருஷ்ணர் கோவிலுக்கு 100 மில்லியன் ரூபாயை ஒதுக்கினார். ஆனால் இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் அமைக்க அங்குள்ள மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்குக் கட்டப்பட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணர் கோவிலின் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டது. மேலும், இந்து கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்து கோவில் கட்டுவது நிறுத்தப்பட்டது. இந்து கோவில் கட்ட அனுமதியளிப்பது குறித்து பாகிஸ்தான் அரசு இஸ்லாமியக் கருத்தியல் சபையிடம் கருத்து கேட்டது. இஸ்லாமியக் கருத்தியல் சபை, இந்து கோவில் கட்ட ஆதரவு தெரிவித்ததோடு சமய சடங்குகளைச் செய்துகொள்ளவும் உரிமை இருக்கிறது எனக் கூறியது.

இதன்தொடர்ச்சியாக, தற்போது பாகிஸ்தான் இந்து கோவிலின் சுற்றுச்சுவர் கட்டிக்கொள்ளவும், இந்துக்களுக்கு சுடுகாடு அமைத்துக்கொள்ளவும் பாகிஸ்தான் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.