கலைஞர் சிலை 2.0 கதை

29 May 2022

கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் முதலில் எடுத்துரைத்தது கீ. வீரமணி, அப்போது அவர் மேற்கோள் காட்டியது கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்பது பெரியாரின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.


ஆனால் 47 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் உயிருடன் இருக்கும் போதே கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டது. அப்போது கலைஞரின் சிலைக்கு விதை போட்டவர் தந்தை பெரியார். பெரியாரின் அன்பு கட்டளையை தட்டி கழிக்க முடியாத கலைஞர் திமுக சார்பில் தந்தை பெரியாருக்கு முதலில் சிலை வைக்கிறோம் பிறகு எனது சிலை குறித்து பார்க்கலாம் என பிரச்னையை தள்ளிப் போட்டார். அதே போல1973ம் ஆண்டு பெரியார் மறைவிற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போதுள்ள சிம்சன் அருகில்  பேராசிரியர் க. அன்பழகன், மணியம்மை முன்னிலையில் கலைஞர் பெரியார் சிலையை திறந்து வைத்தார்.


அதன் பிறகு பெரியாரின் விருப்பம் போல 1975 ம் ஆண்டு செப்.21ந் தேதி அண்ணாசாலையில் திராவிடர் கழகம் சார்பில் கலைஞருக்கு  சிலை வைக்கப்பட்டது. கலைஞர் இளமை தோற்றத்தில் இருக்கும் சிலையை மணியம்மை முன்னிலையில் குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார்.


சிம்சன் அருகே தந்தை பெரியாரின் சிலை,  கால் கிலோ மீட்டரில் ரிச்சி ஸ்ட்ரீட்டில் அண்ணாவின் சிலை, அங்கிருந்து கொஞ்சம் தேவி தியேட்டர் தாண்டி வந்தால் கலைஞர் சிலை, ஸ்பென்சர் பிளாசா அருகே எம் ஜி ஆர் சிலை. இதனை திராவிட அரசியலின் வளர்ச்சி வரலாறு என எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

ஆனால் அந்த திராவிட வரிசையில் ஒரு கோணல் ஏற்பட்டது. கலைஞர் சிலை நிறுவப்பட்டு 12 ஆண்டுகள் கழித்து 1987ம் ஆண்டு எம் ஜி ஆர் காலமாகிறார். தமிழ்நாடு துக்கத்தில் சென்னை அண்ணாசாலை ஸ்தம்பித்தது. எம். ஜி. ஆர் ரசிகர்கள் ஆக்ரோஷமாக கலைஞர் சிலையை கடப்பாரையால் தாக்கி உடைத்தெரிந்தனர்.

கலைஞரின் சிலை தாக்கப்பட்டதில் திமுகவினர் கடும் கொந்தளிப்பில் இருந்தனர். இச்சம்பவம் குறித்து கலைஞர் முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதினார் 


``உடன்பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்தச் சின்னத் தம்பி
என் முதுகில் குத்தவில்லை,
நெஞ்சிலேதான் குத்துகிறான்
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!!"

இப்படியாக பல இடற்பாடுகளுக்கு இடையே தான் கலைஞரின் சிலை ஐந்து கட்டளைகளை தாங்கி காலத்திற்கும் பேசப்படும் வகையில் திராவிட அரசியல் வரலாற்றை வருங்கால சந்ததியினருக்கு கூறும் எடுத்துகாட்டாக நிற்கிறார்.