இறப்பு எண்ணிக்கையை மறைக்கிறதா இந்தியா ?

21 May 2021

இந்தியாவில் கோவிட் மரணங்கள் மறைக்கப்படுவதாக கடந்த சில மாதங்களாக பல வெளிநாட்டு  மருத்துவர்களும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களும் குற்றச்சாட்டுகளை இந்தியா மீது தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

உயிரிழக்கும் பல லட்சம் கோவிட் நோயாளிகளின் மரணங்களுக்கு வேறு பல காரணங்கள் இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படுவதாகத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.


வாரணாசியைச் சேர்ந்தவர் கௌரவ் ஸ்ரீவஸ்தவா. அவரின் உறவினரான 69 வயது முதியவர் ஒருவர் ஏப்ரல் 22-ம் தேதியன்று வாரணாசியிலுள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த முதியவர் இறப்பதற்குச் சில நாள்களுக்கு முன்னர் கோவிட்-19 பாசிட்டிவ் என்று உறுதியானது. அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அவரது மரணத்தை மருத்துவமனை நிர்வாகம் மாரடைப்பு என்று குறிப்பிட்டுள்ளது. இருந்தாலும், மாரடைப்பால் உயிரிழந்த அவரின் உடல், கோவிட் தொற்றுநோயால் உயிரிழந்தவர்களின் உடலோடு சேர்த்துதான் தகனம் செய்யப்பட்டது.

இதேபோல், உயிரிழக்கும் பல லட்சம் கோவிட் நோயாளிகளின் மரணங்களுக்கு வேறு பல காரணங்கள் இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படுவதாகத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுகாதார அளவீடு மற்றும் மதிப்பாய்வு நிறுவனம், சமீபத்தில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அவர்களுடைய பகுப்பாய்வின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்று பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,36,811. இந்த அறிக்கை வெளியானபோது, இந்திய அரசின் அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 2,21,181. அதாவது, வாஷிங்டன் பல்கலைக்கழகம் கூறும் கணக்கில் மூன்றில் ஒரு பங்கு மரணங்களே நிகழ்ந்துள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.

இதுமட்டுமன்றி, ஏப்ரல் 27-ம் தேதியன்று தெலங்கானா உயர் நீதிமன்றம், கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த மாநில அரசின் தரவுகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லையென்று கூறி, உண்மையான தரவுகளை வெளியிடுமாறு கூறியது. மேலும், உண்மையான எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ள ஏதுவாக, இறந்தவர்களைத் தகனம் மற்றும் அடக்கம் செய்யும் இடங்களில் அந்த எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்ற டிஜிட்டல் பலகைகளை வைக்குமாறும் குறிப்பிட்டது. கோவிட் மரணங்கள் இந்தியாவில் குறைத்துக் காட்டப்படுவதாகத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

அந்தப் பிரச்னைக்குள் போவதற்கு முன்னால், நாம் இந்த மரணங்களைப் பதிவு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விதித்துள்ள நெறிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

1. உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச நோய் வகைப்பாட்டு விதிகளின்படி, அறிகுறிகளே இல்லாமல் கோவிட் பாசிட்டிவ் என்று உறுதியான ஒருவர் இறந்தாலும்கூட, அவருடைய மரணம் கோவிட்-19 மரணமாகத்தான் பதிவு செய்யப்பட வேண்டும்.

2. கோவிட் பாசிட்டிவ்வான ஒருவர் சுவாசப் பிரச்னையால் உயிரிழந்தாலும், அவருடைய மரணம் இதன்கீழ்தான் பதிவு செய்யப்பட வேண்டும்.

3. கோவிட் பாசிட்டிவ்வான ஒருவருக்கு இதயக் கோளாறு போன்ற வேறு ஏதேனும் நோய்கள் முன்னமே இருந்தால், அவர் சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிரிழக்கும் ஆபத்து அதிகம். ஆனால், அவர் உயிரிழக்கும்போது அவருடைய இறப்புக்கான காரணமாக அந்தத் துணை நோய்களைக் குறிப்பிடக் கூடாது. அவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியிருப்பதால், அவருடைய இறப்புக்கான காரணத்தை கோவிட்-19 என்றுதான் பதிவு செய்ய வேண்டும்.

4. ஒருவர் கோவிட் பரிசோதனை செய்வதற்கு முன்னர் அல்லது கோவிட் பரிசோதனையில் நெகடிவ் என்று வந்தபிறகு உயிரிழந்திருந்தாலும், அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டிருந்தால், அவருடைய மரணம், `கோவிட்-19 மரணமாக இருக்கலாம்' என்று சந்தேகப் பட்டியலில் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒருவர் கோவிட் பாசிட்டிவ் வந்து, சுவாசப் பிரச்னைகளால் உயிரிழந்திருந்தால், அல்லது கொரோனா பரிசோதனையே செய்யாமலிருந்த ஒருவர் தீவிர மூச்சுத்தவிப்பு (acute respiratory distress syndrome) காரணமாக உயிரிழந்திருந்தால், அல்லது மார்பகப் புற்றுநோய்க்கு ஆளான ஒருவர், பரிசோதனை செய்யாதபோதும் சுவாசிக்க முடியாமல் இறந்திருந்தால், அவருடைய இறப்புச் சான்றிதழில் முதன்மைக் காரணமாக கோவிட்-19 பதிவு செய்யப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த விதிமுறைகளின் படி கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்படுவதில்லை.

கோவிட் தொற்றுநோய், நிமோனியா, தீவிர மூச்சுத்தவிப்பு, இதயக் கோளாறு போன்றவற்றையும் உண்டாக்குவதாகவும் ஐ.சி.எம்.ஆர் கூறுகிறது. ஆகவே, ஒருவர் கொரோனா நெகட்டிவ் வந்திருந்தாலும்கூட, அவர் அதனால் பாதிக்கப்பட்டு தீவிர மூச்சுத்தவிப்பு, நிமோனியா, சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டு உயிரிழந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், மருத்துவமனைகளில் நிகழும் மரணங்கள் மட்டுமே கணக்கில் காட்டப் படுகின்றன. ஒருவருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்திருந்து அல்லது அவருக்கு உரிய நேரத்தில் பரிசோதனை செய்யப்படாமலிருந்து அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்கும்போது உயிரிழந்தால், அவருடைய மரணம் அரசின் கணக்கில் பதிவு செய்யப்படுவதில்லை. மருத்துவமனைகளில்கூட, ஒருவர் கொரோனா சிகிச்சையில் இருந்தாலுமே, மாரடைப்பு, சுவாசக் கோளாறு போன்றவற்றால் உயிரிழந்தால் அவையே முதன்மைக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன, கோவிட்-19 அல்ல.

அதேநேரம், ஒருவர் உயிரிழந்ததற்கான காரணங்களில் கோவிட்-19 ஒரு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் அது கொரோனா மரணமாகத்தான் பதிவு செய்யப்பட வேண்டுமென்று, உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகள் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால், உண்மையில் அப்படிப் பதிவு செய்யப்படுவதில்லை, அவருக்கு இருக்கும் மற்ற பாதிப்புகளே முதன்மைக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இதுபோக, இந்திய கிராமங்களில் கொரோனா பரிசோதனை நகரங்களில் மேற்கொள்ளப்படுவதைவிடவே மிக மிகக் குறைவாகத்தான் செய்யப்படுகிறது. அதோடு, கிராமப்புற மக்களிடையே கோவிட் பாசிட்டிவ் வந்தால், நம்மைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற தேவையற்ற அச்சமும் நிலவுகிறது. ஆகவே, மக்களும் பரிசோதனை செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். இந்த அச்சம் கொரோனா பேரிடர் தொடங்கிய நேரத்திலிருந்தே இருந்துவருகிறது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் இதைச் சரிசெய்யப் போதுமான முயற்சிகளை இதுவரை எடுக்கவில்லை.


இதைவிட மோசமாக, இந்தியாவின் பொது சுகாதாரத்துறையின் செயல்பாடுகளில் பற்றாக்குறை நிலவுகிறது. கொரோனா சந்தேக மரணங்கள் (Suspected Covid-19 deaths) நிகழும்போது, அரசின் பொது சுகாதாரத்துறை அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. கொரோனா மரணங்களில், கணிசமான மக்களுடைய மரணங்கள் மற்ற காரணங்களின்கீழ் பதிவு செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நோய்த்தாக்குதலால் நிகழும் இறப்பு எண்ணிக்கை அதிகமாகும்போது அந்தத் துறையின்மீது களங்கம் ஏற்படும் என்ற காரணத்தால் இதுபோன்ற வேலைகள் பல காலமாகவே உலகளவில் நடைபெறுகின்றன. கொரோனா விஷயத்திலும்கூட, இந்தியாவில் மட்டுமன்றி, அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில், ரஷ்யா, எகிப்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும், பதிவான மரணங்களைவிட மூன்று மடங்கு அதிக மரணம் நிகழ்ந்திருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கை கூறுகிறது.

அனைத்து மாநிலங்களிலுமே, உயிரிழப்பு தணிக்கை கமிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கமிட்டிகள், கொரோனா இறப்பு எண்ணிக்கையைத் தணிக்கை செய்து, அதில் எத்தனை மரணங்கள் உண்மையாகவே கோவிட் மரணங்கள் என்பதை உறுதிசெய்யும். இது நடந்த பிறகே இறுதி எண்ணிக்கை அறிவிக்கப்படும். ஆனால், இந்தியா முழுக்கவுள்ள மாநில அளவிலான இந்த கமிட்டிகள், எத்தனை மரணங்கள் இந்தத் தணிக்கைக்கு வந்தன, அதில் எத்தனை மரணங்கள் கோவிட் மரணங்களாக இறுதியில் பதிவு செய்யப்பட்டன என்ற தரவுகளை வெளியிட மறுக்கின்றன.


இதுகுறித்துப் பேசிய மருத்துவ செயற்பாட்டாளர் டாக்டர் புகழேந்தி, கோவையிலேயே உங்களால் இதைப் பார்க்க முடியும். கோவிட் இறப்பு குறித்து அவர்கள் சொல்லும் தரவு ஒரு மாதிரி இருக்கிறது. அதுவே எரியூட்டப்படும் உடல்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம். கொரோனா உயிரிழப்பில் மட்டுமல்ல, இந்தியாவில் அடிப்படையிலேயே இறப்புக்கான காரணம் மருத்துவரீதியாக அங்கீகரிக்கப்படுவது 20 சதவிகிதம் மட்டும்தான். நாம் ஒரு முடிவுக்கு வேண்டுமெனில் அதற்கு நம்மிடம் சரியான புள்ளிவிவரங்கள் வேண்டும். ஆனால், இந்தியாவில் முறையான புள்ளிவிவரங்கள் இங்கு சேகரிக்கப் படுவதில்லை. அதனால், அடிப்படையிலேயே பிரச்னை தொடங்கிவிடுகிறது. இதை முழுமையாக விசாரித்து, இந்தக் குறைபாடுகளைக் களைய வேண்டும்" என்று கூறினார்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தத் தரவுகள் முழுமையாகவும் வலுவாகவும் சேகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான், கோவிட் தொற்றுநோய் பொது சுகாதாரத்தின்மீது ஏற்படுத்திய தாக்கத்தை முழுமையாக அளவிட முடியும். அதோடு, உரிய நேரத்தில் சுகாதாரத்துறைத் தலையிட்டு, மக்கள் சமூகங்களைப் பாதுகாக்க முடியும்" என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம்.

இதைவிட முக்கியமாக, நகராட்சி அளவிலான கோவிட் உயிரிழப்பு தரவுகளை வலுவாகத் தொகுப்பதன் மூலம், எங்கெல்லாம் உண்மையிலேயே அதிக பாதிப்புகள் இருக்கின்றன என்பதை நகராட்சி அளவில் கண்டுபிடித்து, உரிய திட்டமிடுதலோடு, அங்கெல்லாம் தடுப்பூசிகளைக் கொண்டு சேர்க்க முடியும்.

உலகளவில் இந்தியாவின் கொரோனா பேரிடர்க்கால இயலாமை சுட்டிக்காட்டப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்தோர் குறித்த தரவுகளிலும் ஏற்படும் இந்தத் தெளிவின்மை மக்களுடைய அச்சத்தை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. இந்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு, சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதோடு, உண்மையான இறப்பு விகிதத்தை வெளிப்படைத்தன்மையோடு வைக்க வேண்டும். மேலும், தெலங்கானா உயர் நீதிமன்றம் கூறியதுபோல், கொரோனாவால் உயிரிழந்தோரை தகனம் செய்யும் இடங்களில், டிஜிட்டல் பலகைகளை வைத்து தகனம் செய்யும் எண்ணிக்கையை வெளிப்படையாக வைக்க வேண்டும்.