மத்திய ஆப்பிரிக்க நாட்டில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடி விபத்து; 20 பேர் பலி; 600 பேர் படுகாயம்

09 March 2021

இந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள லிட்ரோல் மாகாணத்தின் தலைநகர் பாட்டாவில் மிகப்பெரிய ராணுவ தளம் ஒன்று அமைந்துள்ளது.இங்குள்ள கிடங்கில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை உள்ளூர் மக்கள் சிலர் ராணுவ தளத்தை சுற்றியுள்ள வயல்களில் தீ வைத்தனர்.

காற்றின் வேகம் காரணமாக இந்த தீ ராணுவ தளத்தில் உள்ள ஆயுத கிடங்குக்கு பரவியது.‌ இதில் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இதில் ஒட்டுமொத்த பாட்டா நகரமே அதிர்ந்தது. வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதில் ராணுவ தளத்தை சுற்றியுள்ள வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.

விண்ணை முட்டும் அளவுக்கு பற்றி எரிந்த தீயால் பாட்டா நகரம் முழுவதும் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பாட்டா நகரில் கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.