நல்ல வழியில் சம்பாதியுங்கள்; நல்ல வழியில் செலவழியுங்கள்!

06 March 2021

ஒவ்வொரு மனிதனும் இறந்த பிறகு அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவான். அப்போது அவனிடம் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த ஐந்து கேள்விகளுக்கும் உரிய விடையை அவன் வாழும் போதே செய்திருக்க வேண்டும். அந்த கேள்விகள் என்னென்ன தெரியுமா?

1. உன் வாழ்க்கை காலத்தை எந்தெந்த பணிகளில் செலவிட்டாய்?
2. மார்க்கக்கல்வி பெற்றிருந்தால், அதன்படி நடந்து கொண்டாயா?
3. பணத்தை என்னென்ன வழிகளில் சம்பாதித்தாய்?
4. எந்தெந்த வழியில் அதைச் செலவிட்டாய்?
5. உன் உடல் உழைப்பை என்னென்ன பணிகளுக்காக கொடுத்தாய்?

முதல் கேள்விக்கு, ""நான் அரசு ஊழியன், நான் வங்கி ஊழியன்,'' என்ற பதிலெல்லாம் சொல்ல முடியாது. நீ என்னென்ன நல்ல செயல்களைச் செய்தாய் என்பது பற்றியே அங்கு பேச முடியும்.மார்க்கக் கல்வி குறித்த அடுத்த கேள்விக்கு, மதநூல்கள் சொல்லும் நல்ல கருத்தைப் படித்தால் மட்டும் போதாது. அதைக் கடைபிடித்திருக்க வேண்டும். அவற்றை மீறி நடந்திருந்தால், தண்டனையிலிருந்து தப்ப முடியாது.பணத்தை நல்ல வழியில் சம்பாதித்து, நல்ல வழியில் செலவழித்திருந்தால் பிழைத்தோம்.இல்லாவிட்டால், நரகத்தில் துன்பப்பட வேண்டியது தான். ஆண்டவனால் தரப்பட்ட இந்த உடலைக் கொண்டு நல்ல செயல்கள் எத்தனை செய்தோம் என்பதற்கும் கணக்கு வேண்டும்.இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், நாம் ஒழுக்கமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நரகத்தில் உழல வேண்டியது தான்!