முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை- ராஜபாளையத்தில் பரபரப்பு

14 April 2021

ராஜபாளையத்தில் முன் விரோதம் காரணமாக திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நண்பரின் கொலைக்கு பழிக்கு பழியாக இக் கொலையை செய்த 3 பட்டதாரி இளைஞர்களை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தாமரைகனி. கபாடி விளையாட்டு வீரரான இவர் நாகர் கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்த இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் 7 ம் தேதி காலை அவர் வசிக்கும் பகுதியிலேயே வைத்து குத்தி கொலை செய்யப்பட்டார்.

ஒரு மாதம் முன் இப் பகுதியில் நடந்த திருமண வீட்டில், இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முன் விரோதம் காரணமாக கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இக் கொலையில் தொடர்புடையவர்களான அப் பகுதியை சேர்ந்த, ஊராட்சி ஒன்றியத்தின் 13 வது வார்டு திமுக கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன், இவரது சகோதரர் சக்திகணேசன், இவர்களது மகன்களான கணபதி சங்கர், கணேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் உறவினர் ஜெயகணேஷ் ஆகிய 6 கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற காவலில் விசாரணை நடத்தப்பட்ட 6 பேரும் கடந்த நவம்பர் மாதம் பெயிலில் வெளியே வந்ததாக தெரிகிறது. பெயிலில் வெளியே வந்த அனைவரும் சொந்த ஊருக்கு வராமல் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்துள்ளனர்.

அண்ணாமலை ஈஸ்வரன் தனது குடும்பத்துடன் நாகர் கோயிலில் வசித்து வந்துள்ளார். இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் தனது சொந்த ஊருக்கு வநததாக கூறப்படுகிறது. இவர் இன்று மதியம் அருகே உள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்த சென்றுள்ளார்.

இவர் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த சிலர், இவர் சென்ற இரு சக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்று கோயில் அருகே வழி மறித்து தலை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அண்ணாமலை ஈஸ்வரன் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து அப் பகுதியை சேர்ந்த குழந்தைவேல் குமார், ஜெகதீஸ்வரன் மற்றும் மதியழக ராஜா ஆகிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் பட்டதாரி இளைஞர்கள் என்பதும், கடந்த வருடம் கொலை செய்யப்பட்டு இறந்த தாமரைக்கனியின் நண்பர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. தங்களின் நண்பரை கொலை செய்தவர்களை பழி வாங்குவதற்காக காத்திருந்துள்ளனர்.

இன்று உடன் யாருமின்றி தனியாக வந்த அண்ணாமலை ஈஸ்வரனை 3 பேரும் இணைந்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மூவரையும் கைது செய்துள்ள காவல் துறையினர் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக திமுக கவுன்சிலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.