தொண்டை வறட்சி.. இருமல்.. மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன் - விளக்கமளித்த தோனி..!

03 October 2020

தான் உடலளவில் ஆரோக்கியமாக உள்ளேனா என்பது குறித்து தோனி விளக்கமளித்துள்ளார்.         

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று ஐபிஎல் நடப்புத் தொடரில் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்தது. நேற்று போட்டியில் ஜடேஜா மட்டும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார்.

இன்னொரு பக்கம் தோனி சரியாக ஷாட் அடிக்க முடியாமல் திணறினார். மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டார். அவருக்கு இருமல் அடிக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவர்களில் என்ன நடந்தது என்பது குறித்து தோனி விளக்கினார். 

"என்னால் நிறைய பந்துகளை சரியாக மிடில் செய்ய முடியவில்லை. பந்தை இழுத்து அடிக்க வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம்.நாங்கள் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. தொழில் நேர்த்தியுடன் ஆடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது கேட்ச்களை எடுக்க வேண்டும், நோ-பால்கள் வீசக்கூடாது. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்த முடியக்கூடியவைதான்.

பேட்ஸ்மேன்களின் பலம் என்னவென்பதை உணர்ந்து வீச வேண்டும். 16-வது ஓவருக்குப் பிறகு செய்த தவறையே செய்தோம்.யாரும் வேண்டுமென்றே கேட்சை விட மாட்டார்கள். ஆனால் இந்த மட்டத்தில் ஆடும்போது, கேட்ச்களை எடுத்தே தீர வேண்டும் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும்.இங்கு பிட்ச் மிகவும் வறட்சியாக இருக்கிறது.

அதேபோல் வெப்பநிலையும் மிக அதிகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தொண்டை வறண்டு விடுகிறது. இதனால் இருமல் வருகிறது. இவை அறிகுறியாக இருக்கும் போது நாம் டைம் எடுத்து ஆடுவதுதான் நல்லது, மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன்”என்றார் தோனி.