திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் அவசியம்

23 September 2021

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இனிமேல் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொற்று குறைந்து வருவதையடுத்து, கடந்த 8ஆம் தேதி முதல் சித்தூர் மாவட்ட மக்களுக்கு மட்டும் நாள்தோறும் 2,000 பேருக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு, சாமி தரிசனத்திற்கு உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

படிப்படியாக தொற்று குறைந்து வருவதால், கடந்த 20ஆம் முதல் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனத்திற்கான டோக்கன்களை 8,000மாக உயர்த்தி திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து, அதிகாலையில் வழங்கப்பட வேண்டிய இலவச தரிசன டோக்கன்களுக்காக இரவு முழுவதும் தங்கி வருவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டதால், ₹.300 சிறப்பு தரிசன டோக்கன்களை போல, இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனிலேயே வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இனிமேல் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்கள் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளது. வரும் 25-ஆம் தேதி முதல் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் பக்தர்களுக்கு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் வகையில் நாளொன்றுக்கு 8 என்ற எண்ணிக்கையில் இலவச தரிசனம் டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும் எனவும், இதன் காரணமாக இம்மாதம் 26-ஆம் தேதி முதல் திருப்பதியில் உள்ள சீனிவாசம் கட்டிட வளாகத்தில் செயல்படும் இலவச தரிசன கவுண்டர் மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.