ஏழை, நடுத்தர மாணவர்களின் உயர்கல்வி கனவை சிதைக்கலாமா? - மநீம கேள்வி

24 May 2022

பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் சினேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட வேண்டும்.பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இது ஏழை, நடுத்தர மாணவர்களின் உயர்கல்விக் கனவை சிதைத்துவிடும். எனவே, தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும்.


உயர்கல்வியில் தமிழகம் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம், அனைத்து தரப்பு மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதே சமூகநீதியின் நோக்கமாகும்.தற்போது ஏஐசிடிஇ அமைத்த, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான தேசிய கட்டணக் குழு, தனது பரிந்துரையை சமர்பித்துள்ளது. அதில், இளநிலைப் பொறியியல் படிப்புக்கு ரூ.79,600 முதல் ரூ.1.90 லட்சம் வரை, முதுநிலைப் பொறியியல் படிப்புக்கு ரூ.1.41 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளது. இதேபோல, பாலிடெக்னிக் மற்றும் மேலாண்மைப் படிப்புகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய கல்விக் கட்டணம் ஏற்கனவே இருந்ததைவிட 20 முதல் 25 சதவீதம் வரை கூடுதலாகும்.மேலும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம்காட்டி, கல்லூரிகள் கட்டணத்தை குறைக்கக் கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமென பலரும் வலியுறுத்தும் சூழலில், கட்டணத்தை உயர்த்தியிருப்பது நியாயமற்றது. எனவே, தமிழக அரசின் கட்டண நிர்ணயக் குழு, ஏஐசிடிஇ பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்.


மேலும், பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டண உயர்வை நிர்ணயிக்க மாநில அரசு குழு அமைத்துள்ள நிலையில், இதை ஏஐசிடிஇ தீர்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வியை சேவை மனப்பான்மையுடன் அணுகுமாறு அறிவுறுத்த வேண்டுமே தவிர, வியாபார நோக்கில் செயல்படத் தூண்டக் கூடாது. கல்லூரிகளின் செலவு அதிகரித்தால், அதற்கு அரசுத் தரப்பில் மானியம் அளிப்பதே தீர்வாகும். இதைவிடுத்து, மாணவர்களின் தலையில் மிளகாய் அரைக்கக்கூடாது.தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள நிலையில், 100 சதவீதம் நிரம்பியுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். 20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம்கூட நிரம்பவில்லை. பல கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கின்றன.


இந்நிலையில், கல்விக் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே சென்றால், பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சொற்பமாகிவிடும். அதுமட்டுமின்றி, மிகக் குறைவான சம்பளத்துக்கே வேலைபார்க்க வேண்டிய சூழலுக்கு பொறியாளர்கள் உள்ளாகியுள்ளனர். எனவே, கல்லூரிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, தரமான கல்வி கிடைக்கச் செய்வது, வேலைவாய்ப்புக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது மட்டுமே அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, கல்வி நிறுவனங்களை லாபம் சம்பாதிக்கும் தொழில் நிறுவனங்களாக மாற்ற உதவுவதாக இருக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.