திருமுல்லைவாயல் அருகே ஆஸ்பத்திரி அதிபரை தாக்கி காரில் கடத்தல் - பெண் உட்பட 4 பேர் கும்பல் கைது

01 December 2022

திருமுல்லைவாயல் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் தனியார் ஆஸ்பத்திரி அதிபரை தாக்கி காரில் கடத்தி சென்ற பெண் உட்பட 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.சென்னைஅம்பத்தூர் லெனின் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 54). இவர் திருமுல்லைவாயல் குளக்கரை தெருவில் கடந்த 1 வருடமாக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பிரதான சாலையில் உள்ள டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அங்கிருந்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து சுந்தரமூர்த்தியுடன் வந்த சிவலிங்கம் என்பவர் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்துஆவடிசரகபோலீஸ்உதவிகமிஷனர்புருஷோத்தமன்உத்தரவின் பேரில், திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். பின்னர், காரை பின்தொடர்ந்து சென்று இரவு சுமார் 11.45 மணியளவில் பல்லாவரம் பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த வைஷாலி உட்பட 4 பேரையும் கைது செய்து சுந்தரமூர்த்தியை அவர்களிடமிருந்து மீட்டனர். அதன் பிறகு 4 பேரையும் திருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் கொண்டு வந்து வைத்து விசாரணை செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:- சுந்தரமூர்த்தி தனக்கு சொந்தமான ஆஸ்பத்திரியை விரிவுபடுத்துவதற்காக முதலீட்டாளர்களை வரவேற்று விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து சென்னை ஜமீன் பல்லாவரம், தர்கா தெருவை சேர்ந்த வைஷாலி (28) என்பவர் சுந்தரமூர்த்திக்கு அறிமுகமாகி ரூ.7 லட்சம் ஆஸ்பத்திரி விரிவாக்க பணிக்காக முதலீடு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு ஆஸ்பத்திரியில் வருமானம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து முதலீடு செய்த பணத்தை திருப்பி தருமாறு வைஷாலி சுந்தரமூர்த்தியிடம் கேட்டுள்ளார். ஆனால் சுந்தரமூர்த்தி பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வைஷாலி நேற்று முன்தினம் இரவு தனது கூட்டாளிகளான பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்த பாரதிதாசன் (39), பழைய பல்லாவரம், கண்ணபிரான் தெருவை சேர்ந்த சிவா (30) மற்றும் தேவகுமார் (27) ஆகிய 3 பேருடன் திருமுல்லைவாயல் பகுதிக்கு வந்து சுந்தரமூர்த்திக்கு போன் செய்து அழைத்துள்ளார். அப்போது சுந்தரமூர்த்தி ஆஸ்பத்திரி ஊழியரான சிவலிங்கம் (70) என்பவரை அழைத்துக் கொண்டு அங்குள்ள டீக்கடை அருகே வைஷாலியை சந்திக்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பணம் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் வைஷாலி காரில் மறைந்திருந்த கூட்டாளிகள் 3 பேர் உதவியுடன் சுந்தரமூர்த்தியை சரமாரியாக தாக்கி காரில் கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரமூர்த்தியின் மகள் விஷ்ணுபிரியா (29) கொடுத்த புகாரின் பேரில், திருமுல்லைவாயல் போலீசார் கடத்தல் கும்பலை சேர்ந்த வைஷாலி, பாரதிதாசன், சிவா, தேவகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து நேற்று மாலை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் ஆஸ்பத்திரி அதிபரை தாக்கி காரில் கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.