நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பா.ஜனதாவில் சேர்ந்தார் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.

08 March 2021

இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பா.ஜனதாவில் சேர்ந்தார். பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.கடந்த 1980-களில் இந்தியில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்ரவர்த்தி.

தமிழில், மணிரத்னம் இயக்கத்தில் ‘குரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அவரது பெயர் அடிபட்டதால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த மாதம், மும்பையில் மிதுன் சக்ரவர்த்தியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்தித்து பேசினார். அதனால் மிதுன் சக்ரவர்த்தி பா.ஜனதா பக்கம் சாய்வதாக கருதப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவை மிதுன் சக்ரவர்த்தி சந்தித்தார்.

அப்போது, அவர் பா.ஜனதாவில் இணைந்தார்.மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி நேற்று கொல்கத்தாவுக்கு வந்தார். கொல்கத்தாவில் படை அணிவகுப்பு மைதானத்தில் அவரது பொதுக்கூட்டம் நடைபெற்றது.பிரதமர் மோடி பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்தார். மிதுன் சக்ரவர்த்தியை பா.ஜனதாவுக்கு வரவேற்பதாக தெரிவித்தார்.