உலகம் முழுவதும் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் - WHO

31 May 2021

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே முழுமையாக கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி போடும் நடவடிக்கையை பல நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில்் கொரோனா பரவல் குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் ஹென்ஸ் க்ளூஜ் "இந்தியாவிலிருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனின் உருமாற்ற கொரோனாவை விட வீரியமிக்கதாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசியால் இயல்பு நிலை திரும்பி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும் ”உலக மக்கள் தொகையில் 70 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால்தான் கொரோனா சங்கிலியை முழுமையாக உடைக்க முடியும். இதுவரை உலக மக்கள் தொகையில் 10% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.