டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

04 April 2021

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, வாக்குப்பதிவு நடை பெறுவதையொட்டி இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறையால் டாஸ்மாக் கடைகளில் நேற்று மாலை முதல் மது வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. 

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான விற்பனையை விட 30 சதவீதத்திற்கு மேல் அதிக மது விற்பனை ஆகியுள்ளது. வழக்கமாக 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெறும் நிலையில் நேற்று ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி இருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.