இளம் பெண் பாலியல் புகார்: வேளாண்மை துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்!
12 November 2025
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வேளாண் துறை உதவி இயக்குநராக பணி புரிந்து வந்த அறிவழகன், தன்னுடைய கீழ் பணி புரியும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அறிவழகன் தென்காசி மாவட்ட வேளாண் துறையில் பணிபுரிந்தவர். பணிக்கு ஒழுங்காக செல்லாதது, பணி நேரத்தில் மது போதையில் இருப்பது போன்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் அங்கிருந்து ஓட்டப்பிடாரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இங்கு வந்த பிறகும் முறையாகப் பணிக்கு செல்லாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பணி நேரத்தில் மது அருந்துவதை தொடர்ந்து கடைபிடித்தே வந்துள்ளார்.
இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன் அதே ஓட்டப்பிடாரம் உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் தனக்குக் கீழ் பணிபுரிந்த இளம்பெண் ஒருவரை அலுவலகப்பணி என தன்னுடைய காரில் அழைத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
செல்லும் வழியிலேயே காரில் அந்த ஊழியரிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததாகத் தெரிகிறது.
தொடர்ந்து கையைப் பிடித்து இழுத்து முத்தம் தர முயன்றதாகவும், அந்த பெண் கத்திக் கூச்சலிட்டதும் விட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்று பணி முடிந்து வீடு திரும்பிய அந்தப் பெண் ஊழியர் தன்னுடைய வீட்டில் நடந்ததைச் சொல்லி அழுதுள்ளார். உடனடியாக பெண்ணின் தரப்பிலிருந்து சிலர் அறிவழகனைத் தொடர்பு கொண்டு இதுதொடர்பாகக் கேட்டதும், உடனே சுதாரித்துக் கொண்ட அறிவழகன் அந்தப் பெண்ணிடம் பேசி, வருத்தம் தெரிவித்துள்ளார்.
அப்போது கூட, "இனிமேல் அது போல நடந்து கொள்ள மாட்டேன்” என்றதுடன் நிறுத்தாமல், "கையை தானே தொட்டேன், அது தப்பா?” என்றும், "உனக்குச் சம்மதம் இல்லையென்றால் வேண்டாம்” என்றும் கூறியிருக்கிறார்.
அறிவழகன் அந்தப் பெண்ணிடம் பேசிய ஆடியோ தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான காந்திமதிநாதனுக்கு கிடைக்க, அவர் இன்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்துக்கு அதை அனுப்பி, அறிவழகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
புகாரை விசாரித்த ஆட்சியர் உடனடியாக அறிவழகனை பணியிடை செய்து உத்தரவிட்டுள்ளார்.