திருவாரூர் அருகே பெரியகொத்தூர் பாசன வாய்க்காலில் தரைப்பாலம் கட்டப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

05 July 2021


திருவாரூர் அருகே பெரியகொத்தூர் பாசன வாய்க்காலில் தரைப்பாலம் கட்டவேண்டும் என விவசாயிகளும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் உச்சுவாடியிலிருந்து மன்னஞ்சி செல்லும் சாலையின் இடையே பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்க்கால் மூலம் பெரியகொத்தூர், சின்னகொத்தூர், மன்னஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில் பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் குறுகலாக இருப்பதால் தண்ணீர் அதிக அளவு செல்லும் போது கரையில் உள்ள மண் சரிந்து வாய்க்காலுக்குள் விழுகிறது. மேலும் காரையின் மேல்பகுதியில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்படுகிறது. இதனால், வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் வரும் போது சாலையில் உடைப்பு ஏற்படும் அபாயம் நிலை உள்ளது. கரையில் ஏற்படும் மண் சரிவை தற்போது அந்த பகுதி மக்கள் தற்காலிகமாக கவணை ஏற்படுத்தி சீரமைத்துள்ளனர். 

கரையில் ஏற்பட்டுள்ள மண் சரிவை தடுக்க அமைக்கப்பட்டுள்ள கவணையால் வாய்க்காலில் வரும் தண்ணீர் முழுமையாக விவசாய நிலங்களுக்குச் செல்ல சீரமம் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள வேதனை தெரிவிக்கின்றனர். 

எனவே, பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் கரையில் மண் சரிவை தடுக்க தடுப்புச்சுவர் மற்றும் பாசன வாய்க்கால் குறுக்கே தண்ணீர் தாராளமாக செல்லும் வகையில் தரைப்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடவடிக்கை எடுக்கப்படுமா?

நிருபர் மீனா திருவாரூர்