வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவு

29 January 2026

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வரும் நிலையில், பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களின் விவரங்களை அந்தந்த கிராம பஞ்சாயத்து, தாலுகா மற்றும் நகர்ப்புற வார்டு அலுவலகங்களில் பொதுப்பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் சுமார் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த நீக்கம் தொடர்பாக ஆட்சேபனை உள்ளவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே ஜனவரி 30 வரை அவகாசம் இருந்த நிலையில், தற்போது அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் பணிகளுக்காகத் தேவையான அலுவலர்களை மாநில அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நீக்கப்பட்டவர்கள் பூத் ஏஜெண்டுகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. திட்டமிட்டபடி பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், இதுவரை சுமார் 16 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.