இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்
23 February 2026
தமிழகத்தில் 2026 ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (பிப். 23) வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த இறுதிப் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டிருப்பதாகக் கருதுவோர், 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மாவட்ட ஆட்சியரின் முடிவில் அதிருப்தி இருந்தால், அடுத்த 30 நாட்களுக்குள் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம். வாக்காளர்கள் தங்கள் பெயர்களை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும், புதிதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6-ஐப் பயன்படுத்தி இணையதளம் (voters.eci.gov.in), 'Voter Helpline' செயலி அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1950 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டு வாக்காளர்கள் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.