திமுக அரசு இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டது - விஜய் விமர்சனம்

08 February 2026

தமிழகத்தில் தற்போதைய திமுக அரசு இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை முழுமையாகச் சிதைத்துவிட்டது என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.


இது தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அரசுத் தேர்வுகளில் நிலவும் குளறுபடிகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறையாக நடத்தப்படாததும், தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் காலதாமதமும் படித்து முடித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் நேரத்தில் அளித்த நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் வெறும் காகித அளவிலேயே இருப்பதாகவும், நிர்வாகத் திறமையின்மையால் இளைஞர்களின் கனவுகள் சிதைக்கப்படுவதாகவும் அவர் சாடினார். மக்கள் நலனை விட விளம்பரத்திற்கே இந்த அரசு முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்ட விஜய், இளைஞர்களின் உரிமைகளை மீட்கவும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் தனது கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என உறுதியளித்தார்.