விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி சங்கீதா நீதிமன்றத்தில் மனு
27 February 2026
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். சுமார் 25 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகவும், அதனைத் தான் கண்டுபிடித்த பிறகு அவர் அதை முறித்துக் கொள்வதாகக் கூறிவிட்டு, தொடர்ந்து அந்த உறவில் நீடித்ததாகவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார். 2021-ஆம் ஆண்டு முதல் இருவரும் மனதளவிலும் உணர்வுப்பூர்வமாகவும் பிரிந்து வாழ்வதாகத் தெரிவித்துள்ள அவர், தற்போது தனக்கு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை வழக்கில் இணைப்பேன் என்றும், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்க ஏப்ரல் 20-ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.