தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தனித்துப் போட்டி: 4 முனைப் போட்டி உறுதி

17 March 2026

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத் தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க. என நான்கு முனைப் போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது. முன்னதாக, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.வை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் துணை முதல்வர் பதவி மற்றும் குறிப்பிட்ட தொகுதிகள் தொடர்பான நிபந்தனைகளில் உடன்பாடு ஏற்படாததால் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 174 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் ஒன்றாக வெளியிடப்பட உள்ளன. நடிகர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், முக்கிய நிர்வாகிகள் சென்னை நகரின் பல்வேறு தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 'நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்ற நம்பிக்கையுடன் களப்பணியாற்ற நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.