சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்கிறார் விஜய்: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நாளை ஆஜர்!

11 January 2026

சென்னை:
தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்காக நாளை (ஜனவரி 12, 2026) புது தில்லி செல்கிறார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ தரப்பில் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் அவர் நாளை ஆஜராக உள்ளார்.


ஏற்கனவே கரூரில் விஜய்யின் பிரசார வாகனம் மற்றும் விபத்து நடந்த இடத்தை டெல்லி தடயவியல் நிபுணர்கள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தவெக நிர்வாகிகள் சிலரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த விசாரணைக்குப் பிறகு, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்த அடுத்தகட்ட முடிவுகளை சிபிஐ எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.