விஜய்யுடன் ஆன சிபிஐ விசாரணை நிறைவு
12 January 2026
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேற்று (ஜனவரி 12) நேரில் ஆஜரானார்.
காலை 11:30 மணியளவில் தொடங்கிய விசாரணை சுமார் 7 மணி நேரம் நீடித்தது. சிபிஐ அதிகாரிகள் கூட்ட நெரிசல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக குறைபாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை அவரிடம் எழுப்பினர்.
முதலில் இன்று (ஜனவரி 13) மீண்டும் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய்யின் கோரிக்கையை ஏற்று இன்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
நேற்று இரவு டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஓட்டலில் தங்கிய விஜய், இன்று சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோரும் டெல்லி சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.