உசிலம்பட்டி - வத்தலகுண்டு சாலையில் ஆபத்து! ரயில்வே கேட் பகுதியில் மழைநீரால் விபத்துகள் - ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல்
22 October 2025
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி - வத்தலகுண்டு சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் பல நாட்களாக மழைநீர் தேங்கி, சாலை குண்டும் குழியுமாக, ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. இதனால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மேடு பள்ளம் தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது.
15 பேர் விபத்து; கர்ப்பிணிப் பெண்ணும் காயம்!
இந்த ஆபத்தான சாலையில், இன்று மட்டும் சுமார் 15 பேர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். இதில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலை சீரமைக்கப்படாததால் ஏற்பட்டுள்ள இந்த விபத்துகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர்.
இளைஞர்கள் மறியல் போராட்டம்
இதன் தொடர்ச்சியாக, இன்று இரவு சுமார் 6:30 மணி அளவில், நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு, சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் பகுதியில் பேருந்துகளை மறித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உசிலம்பட்டி - வத்தலகுண்டு சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை; இன்று இரவுக்குள் சீரமைக்க உறுதி
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை சீரமைப்புப் பணிகளின் அவசியத்தை வலியுறுத்திய இளைஞர்களிடம், இன்று இரவுக்குள் மழைநீர் தேங்கிய பள்ளங்களில் மண் போட்டு தற்காலிகமாகச் சமன் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர், போக்குவரத்து மீண்டும் சீரடைந்தது.
Dr. R. Rajaganapathi
Usilampatti madurai
7200062082