உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்

23 January 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளை எச்சரிப்பதில் அந்த அமைப்பு தோல்வி அடைந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி, இந்த அதிரடி முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. முன்னதாக, உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த அமைப்படனான உறவை முழுமையாகத் துண்டித்துக் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நிதி பங்களிப்பாளராக அமெரிக்கா இருந்து வந்த நிலையில், இந்த வெளியேற்றம் அந்த அமைப்பின் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் இந்த முடிவிற்குப் பல்வேறு உலக நாடுகளும், மருத்துவ அமைப்புகளும் தங்களின் கவலைகளையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றன.