2026 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியீடு

04 February 2026

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான உயரிய குடிமைப் பணிகளுக்கான 2026-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பை இன்று (பிப்ரவரி 4) வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வின் மூலம் மொத்தம் 933 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று முதல் பிப்ரவரி 24-ஆம் தேதி மாலை 6 மணி வரை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு அட்டவணையின்படி, முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam) வரும் மே 24-ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு (Main Exam) ஆகஸ்ட் 21-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளைக் கொண்ட இந்தத் தேர்வின் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை தேர்வாணையத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.