அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்ப் விதித்த வரிகளை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு
20 February 2026
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாகக் கூறி, அவர் விதித்த வர்த்தக வரிகளை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஒத்துழைப்பைப் பெறவும் அழுத்தம் கொடுக்கும் வகையில் டிரம்ப் அதிகப்படியான வரிகளை விதித்ததால், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. இந்தச் சூழலில், உலக நாடுகளின் மீது இத்தகைய வரிகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அவற்றைச் சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. ஏற்கனவே 2025 மே மாதம் கீழமை நீதிமன்றம் இதே போன்ற தீர்ப்பை வழங்கியிருந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் விதிக்கப்பட்ட வரிகளை மட்டுமே இந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தும் என்றும், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்கள் குறித்து நீதிமன்றம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.