இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் குறித்து ரஷியாவின் விளக்கம்

11 February 2026

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்திவிட்டு, இனி அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்தை ரஷிய அரசு மறுத்துள்ளது.


இது தொடர்பாக ரஷிய நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இத்தகைய முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டுமே கூறி வருவதாகவும், இந்தியத் தரப்பிலிருந்து அத்தகைய அறிவிப்பு எதையும் தாங்கள் பெறவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.


பிரதமர் மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களிடமிருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வரி மற்றும் தடைகள் மூலம் இந்தியா போன்ற நாடுகளைக் கட்டாயப்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், கடந்த டிசம்பர் 2025-இல் அதிபர் புதின் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.