ஏப்ரலில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்கிறார் டிரம்ப்
13 February 2026
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வரும் ஏப்ரல் மாதம் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் சீன அதிபருடன் சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக உரையாடிய டிரம்ப், அந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும் நேர்மறையாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பின் போது வர்த்தகம், உக்ரைன் - ரஷ்யா போர், தைவான் விவகாரம் மற்றும் அமெரிக்க விவசாயிகளிடமிருந்து சோயா பீன்ஸ் உள்ளிட்ட விளைபொருட்களைச் சீனா கொள்முதல் செய்வது போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தற்போது மிகவும் சீராகவும் சிறப்பாகவும் இருப்பதாகத் தெரிவித்த டிரம்ப், ஏப்ரல் பயணத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு வருகை தந்து தன்னைச் சந்திப்பார் என்றும் கூறினார். இரு பெரும் நாடுகளின் தலைவர்கள் இடையிலான இந்தச் சந்திப்பு உலக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.