தொழில் நஷ்டம்: ரெயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

04 January 2026

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், கஞ்ச்வாகா பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட ரமணா (64). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராணுவப் பணிக்குப் பிறகு, விசாகப்பட்டினத்தில் உள்ள இரும்பு ஆலையில் பணியாற்றிய அவர், பின்னர் தனது சொந்தப் பகுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட் தொடங்கி நடத்தி வந்தார்.




சமீபகாலமாக அவர் நடத்தி வந்த சூப்பர் மார்க்கெட் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளான வெங்கட ரமணா, மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று துவாடா பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்குச் சென்ற அவர், அங்கு தண்டவாளப் பகுதியில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரெயில் முன் திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் வெங்கட ரமணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...