விடுமுறை தினம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

15 February 2026

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் குவிந்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் மகா சிவராத்திரியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தனர். பொதுத் தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து இறைவனை வழிபட்டனர். மேலும், ஏராளமான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றதுடன், அங்குள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணிகளுக்காகப் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.