திருப்பதி வைகுண்ட ஏகாதசி விழா: 10 நாட்களில் ₹41 கோடி காணிக்கை - 7.83 லட்சம் பக்தர்கள் தரிசனம்
09 January 2026
வைகுண்ட ஏகாதசி விழா: திருப்பதியில் 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் தரிசனம் - ரூ.41 கோடி காணிக்கை குவிந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த மாதம் 30-ஆம் தேதி வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு, நேற்று வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த 10 நாட்களில் மட்டும் மொத்தம் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.41.14 கோடி கிடைத்துள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 6.83 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ஒரு லட்சம் பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
மேலும், தரிசனம் செய்தவர்களில் 2.60 லட்சம் பக்தர்கள் தங்களது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்குத் தட்டுப்பாடின்றி வழங்க சுமார் 44 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன; இது கடந்த ஆண்டை விட 10 லட்சம் லட்டுகள் கூடுதலாகும். இந்த ஆண்டு விழாவினை எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நடத்த 2,000 போலீசார் மற்றும் 1,150 தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவஸ்தான அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பான முன்னேற்பாடுகளால் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.