கோலாகலமாக நடைபெற்ற மகாதீபம் நிகழ்வு

03 December 2025

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று கோலாகலமாக கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மகாதீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதனை ஒட்டி தீபக் கொப்பரை நேற்று மலைக்கு கொண்டு செல்லப்பட்டது இதில் 4500 லிட்டர் நெய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதில் காடா துணியில் செய்யப்பட்ட பிரம்மாண்டமான திரி வைக்கப்பட்டு மாலை 6:00 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அந்த நேரத்தில் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கூடி இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். 

தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலை நகரை சுற்றி முழுவதும் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது...