தொடர் விடுமுறை: திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

26 January 2026

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட மூன்று நாட்கள் தொடர் விடுமுறையால் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்றும் (ஜனவரி 25) காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக அம்மணி அம்மன் கோபுர வாயிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெரு வரை நீண்ட வரிசை காணப்படுகிறது. பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்து வரும் நிலையில், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள் மற்றும் இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும், ஏராளமான பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.