முதல் படை வீடே! முருகப்பெருமானே!

09 December 2025

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனையில் தொடர்ந்து தமிழக அரசும் நீதிமன்றமும் மாற்று கருத்துடன் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். 


இந்த அளவுக்கு நாடு முழுவதும் பிரபலமாகியுள்ள இந்த திருப்பரங்குன்றம் கோவிலின் முக்கியத்துவம் எத்தனை பேருக்கு தெரியும். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக திகழ்கின்றது இந்த திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இந்த கோவிலானது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகிறது. இந்த கோவில் மதுரைக்கு தென்மேற்கில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு பல வரலாறுகள் இருக்கும் போதிலும் இங்குதான் முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே இந்த கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். மேலும் மதுரையைச் சேர்ந்த ஏராளமானவர்களின் திருமணம் கூட இங்கு நடைபெறுவது வழக்கம். 


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறை ஒரு குகை கோவில் ஆகும். மேலும் இந்த கருவறையில் ஐந்து குகைகள் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் 5 சந்நிதிகள் உள்ளன. அவை யாவன 

சுப்பிரமணிய சுவாமி சன்னிதி 

துர்கா தேவி சந்நிதி 

கற்பக விநாயகர் சன்னதி 

சத்யகிரீஸ்வரர் சன்னதி 

பவளக்கனிவாய் பெருமாள் சன்னிதி 

ஆகிய ஐந்து சந்நிதிகள் அமைந்துள்ளன.
திருப்பரங்குன்றம் கோவிலின் கோபுரம் 46 மீட்டர் உயரம் உடையது. கோபுரத்தின் அடிப்பகுதியில் பல சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

கோவிலின் தல வரலாறு

முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்ம தேவனுக்கு உபதேசித்த போதிலும் சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒருவரே ஆனாலும் உலக நியதிக்கு ஒட்டாத சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால் இக்குற்றத்திற்கு பரிகாரம் தேடி முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது சிவபெருமானும் பார்வதி தேவியும் தோன்றி முருகப் பெருமானுக்கு காட்சி தந்து தவத்தை பாராட்டி பரங்கிநாதர் ஆவுடை நாயகி என்று பெயர் பெற்றனர்.

முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த பின்னர் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திர தேவன் தனது மகள் தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பியதால் முருகன் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இதன் காரணமாகவே திருமண விழாவிற்கு இந்த திருப்பரங்குன்றம் கோவில் மிகவும் பெயர் போன ஒரு கோவிலாகும். 

சிவபெருமான் குன்றம் எனும் மலை வடிவாக காட்சியளிக்கும் இடம் என்பதால் திரு+பரம்+ குன்றம் என பிரிக்கப்பட்டு இந்த இடம் திருப்பரங்குன்றம் என பெயர் பெற்றது. மேலும் இந்த மலை ஆனது சிவலிங்க வடிவிலேயே காணப்படும். 

திருப்பரங்குன்றம் குறித்து பல்வேறு சங்க இலக்கியங்களில் பாடப்பட்டுள்ளது.. குறிப்பாக திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, மதுரைக்காஞ்சி உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இம்மலை குறித்து குறிப்புகள் அடங்கியுள்ளன. 

முருகனின் அறுபடை வீட்டு கோவில்களிலேயே மிகப்பெரிய கோவில் இந்த திருப்பரங்குன்றம் ஆகும். 

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருப்பரங்குன்றம் கோவிலுக்கு தீபம் ஏற்றுவது மற்றும் என்ன விதமான பிரச்சனைகள் வந்தாலும் தன்னுடைய தனித்தன்மையை விட்டு இந்த கோவில் என்றும் நீங்காது என்பதில் சந்தேகமே இல்லை....