திருநங்கைகள் கூட்டத்தில் விழுப்புரம் போலீஸ் எச்சரிக்கை

27 November 2025

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாகத் திருநங்கைகள் சிலர், வெளியூர் பயணிகளிடம் வலுக்கட்டாயமாகப் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், பொது இடங்களில் அத்துமீறிய செயல்களில் ஈடுபடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் உத்தரவின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் எல்லைக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  இளமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திருநங்கைகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இரவு நேரங்களில் பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தேவையின்றி சுற்றித் திரியக்கூடாது.

வெளியூர் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பணம் பறிப்பதோ, தகாத வார்த்தைகளில் பேசுவதோ கூடாது. வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். எச்சரிக்கையோடு மட்டுமல்லாமல், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அரசு வழங்கும் கடனுதவிகளைப் பெற்று, சிறு தொழில்கள் தொடங்கி சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இந்தக் கூட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில், இனி பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலான செயல்களில் ஈடுபட மாட்டோம் எனத் திருநங்கைகள் காவல்துறையினரிடம் உறுதி அளித்தனர். இந்நிகழ்வில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.


--PS Parthi