திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

16 February 2026

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாகக் காணப்பட்டது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர். அவர்கள் கடலிலும், நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடிய பின், நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். பொது தரிசன வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிறந்த பரிகாரத் தலமாகவும் ஆன்மீகச் சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் இக்கோவிலுக்கு முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம் என்பதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் விரிவாகச் செய்யப்பட்டிருந்தன.