முகப்பு மாட்டுப் பொங்கல்: தஞ்சைப் பெரிய கோயில் நந்திக்கு 2,000 கிலோ இனிப்பு, பழங்களால் சிறப்பு அலங்காரம்
தஞ்சாவூர் உலகப் புகழ்பெற்ற பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 108 கோ பூஜை மற்றும் நந்தி பகவானுக்குச் சிறப்பு அலங்காரங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
விழாவின் தொடக்கமாக 108 பசுக்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, மாலைகள் அணிவித்துச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பசுக்களுக்குச் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் உணவாக வழங்கப்பட்டன.
பின்னர், கோயிலிலுள்ள மகா நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, கரும்புச்சாறு, இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அபிஷேகம் முடிந்த பிறகு, இரண்டு டன் எடையுள்ள இனிப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு நந்தி பகவானுக்குப் பிரம்மாண்டமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
ஆன்மிகப் பக்தி மணம் கமழ நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.