சென்னை மெரினாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்த கவர்னர்

26 January 2026

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. முன்னதாக, விழா மேடைக்கு வருகை தந்த கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்று, முப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து, ராணுவம், கடற்படை, வான்படை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைத் தகுதியுடையவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விழாவின் சிறப்பம்சமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் பொதுமக்களின் பெரும் வரவேற்புடன் நடைபெற்றன.