டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

15 February 2026

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். திலக் வர்மா 25 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது.
அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஷாஹிப்சாதா பர்ஹான், பாபர் அசாம், கேப்டன் சல்மான் ஆகா போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையைச் சரித்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் இந்தச் சிறப்பான வெற்றியை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.