திருச்செந்தூரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு

26 October 2025

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை நடக்க உள்ளது. இந்த நிலையில்  லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் முக்கிய நிகழ்வான நாளை ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்ற காரணத்தால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த 17 வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

அதுமட்டுமின்றி சிறப்பு பேருந்துகள் நிறுத்துவதற்கு தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள ஐடிஐ வளாகத்தில் பக்தர்களை இறக்கிவிட்டு திரும்பிச் செல்ல வேண்டும். இதேபோன்று ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒவ்வொரு நிறுத்தங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.