10 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை

01 March 2026

நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்று வேட்பாளர் தேர்வு குறித்து விரிவாக ஆலோசித்தனர். குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கூட்டணி ஆட்சியில் உள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், அடுத்த இரண்டு நாட்களில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.