திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

14 February 2026

தமிழக ஆளுநர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு மற்றும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று (பிப். 14, 2026) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஆளுநர் மற்றும் பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கண்டனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போதே அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார் (பின்னர் வருத்தம் தெரிவித்ததையடுத்து மீண்டும் சேர்க்கப்பட்டார்). தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு சிறைத் தண்டனையுடன் ரூ. 20,000 அபராதமும் விதித்துள்ளது. மேலும், இந்தத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவருக்கு ஒரு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.