திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரேம்ப் வாக்'

09 March 2026

திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வரும் திமுகவின் பிரம்மாண்ட மாநில மாநாட்டில், சுமார் அரை கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நடைபாதையில் (Ramp) முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து வந்து லட்சக்கணக்கான தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மாலை 6.40 மணியளவில் மாநாட்டுத் திடலுக்கு வருகை தந்த அவர், முதலில் 110 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பின்னர், தொண்டர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் கம்பீரமாக கையசைத்தபடி அந்த நீண்ட நடைபாதையில் நடந்து வந்து மேடையை அடைந்தார். மேடையில் திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவருக்கு, கட்சி நிர்வாகிகள் சார்பில் வெள்ளி செங்கோல் மற்றும் வெற்றிவாள் உள்ளிட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்த மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக தனது பலத்தைக் காட்டும் வகையில் இந்த மாநாடு மிக எழுச்சியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.