திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை உடனே அமைக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

10 February 2026

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை குழுவை இன்னும் அமைக்காதது காங்கிரஸ் கட்சிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


டெல்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது வேட்பாளர் தேர்விலும் தேர்தல் பணிகளிலும் சிக்கல்களை உருவாக்கும் என மற்ற மாநில அனுபவங்களைக் குறிப்பிட்டு எச்சரித்தார்.


எனவே, தேர்தல் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லவும், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே போன்ற தலைவர்களின் பிரச்சாரப் பயணங்களைத் திட்டமிடவும் ஏதுவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தொகுதி பங்கீடு குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் முதலமைச்சரை நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாட்டை விளக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.