கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய சீமான் வலியுறுத்தல்
12 February 2026
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்டகாலமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) பரிந்துரைத்தபடி கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ₹57,500 மாத ஊதியத்தை சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வரும் இவர்களின் உழைப்பினைச் சுரண்டுவதை விடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தகுதியான கௌரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாகப் பணி நிலைப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.