காரைக்குடியில் சீமான் போட்டி: நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் அறிமுகம்
21 February 2026
திருச்சி மாவட்டம் ஆலம்பட்டிபுதூரில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' நிகழ்வில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இதில் சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் கட்சி பெற்ற கணிசமான வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த வேட்பாளர் பட்டியலில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்களில் 40 பொறியாளர்கள், 33 வழக்கறிஞர்கள் மற்றும் 15 மருத்துவர்கள் அடங்குவர். முக்கிய வேட்பாளர்களாக இடும்பாவனம் கார்த்திக் (வேதாரண்யம்), திரைப்பட இயக்குநர் களஞ்சியம் (ஆயிரம் விளக்கு), வீரப்பனின் மகள் வித்யாராணி (மேட்டூர்), மற்றும் அம்பேத் ராஜன் (திருப்போரூர்) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.