அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர்: 2-வது நாளாக இந்திய விமானங்கள் ரத்து

01 March 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போர்ச் சூழல் காரணமாக வான்வெளியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களால், இந்திய விமான சேவைகள் இன்று (01.03.2026) இரண்டாவது நாளாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இயக்கப்பட வேண்டிய சுமார் 350 விமானங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக நேற்று 410 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், போர் பதற்றம் நீடிப்பதால் இன்றும் இந்த ரத்து நடவடிக்கைகள் தொடர்கின்றன. குறிப்பாக அமெரிக்கா, லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய கிழக்கு வான்வெளி வழியாகச் செல்லும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வரும் நிலையில், அவர்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.