அரசு பள்ளி வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 மாணவர்கள் கைது
03 November 2025
ஓட்டப்பிடாரம் அருகே மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் அரசு பள்ளி வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சவலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 29-ந் தேதி வாகைகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதில் சவலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளி சேர்ந்த மாணவர்களும், வல்லநாடு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களும் பங்கு பெற்றனர்.
பயிற்சி மதிய இடைவேளையின் போது வல்லநாடு அரசு பள்ளி மாணவர்கள், சவலாப்பேரி மாணவர்களை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு பள்ளி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இரு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களை சமாதானப்படுத்தினார். பள்ளி மாணவர்களை தாக்கிய விவகாரம் குறித்து எவ்வித நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து சம்பவத்தன்று சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2 பெட்ரோல் குண்டு வீசி சென்றனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பெட்ராேல் குண்டு வீசியவர்கள் புளியம்பட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான சுரேந்திரன் (19) மற்றும் 16 வயதுடைய 2 மாணவர்கள் என தெரிய வந்தது. அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.