சபரிமலையில் விண்ணைப் பிளந்த 'சரணம் ஐயப்பா' கோஷம்

14 January 2026

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தின் சிகர நிகழ்வான 'மகரஜோதி' தரிசனம் இன்று மாலை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சியளித்ததைக் கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.



மகர சங்கிரம பூஜை: இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. மதியம் 3:08 மணியளவில், சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் 'மகர சங்கிரம பூஜை' நடைபெற்றது. அப்போது திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்பட்ட நெய்யால் ஐயப்பனுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.


பந்தளம் அரண்மனையிலிருந்து கடந்த 12-ம் தேதி புறப்பட்ட ஐயப்பனின் திருவாபரணப் பெட்டிகள் இன்று மாலை 6:25 மணியளவில் சன்னிதானத்தைச் சென்றடைந்தன. தேவசம் போர்டு அதிகாரிகள் மற்றும் தந்திரிகள் இந்தப் பெட்டிகளை முறைப்படி வரவேற்று சன்னிதானத்திற்குள் கொண்டு சென்றனர்.


மாலை 6:40 மணியளவில், ஐயப்பனுக்குத் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அந்தச் சமயத்தில் வானில் மகர நட்சத்திரம் பிரகாசமாகத் தோன்றியது.



தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில், சரியாக மாலை 6:41 மணியளவில் சபரிமலைக்கு எதிரே உள்ள பொன்னம்பலமேட்டில் மகரஜோதி காட்சியளித்தது. அடுத்தடுத்து மூன்று முறை ஜோதி தெரிந்ததைக் கண்ட பக்தர்கள் மெய்மறந்து சரண கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆண்டு மகரஜோதியைத் தரிசிக்க சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்க சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் 4000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜோதி தரிசனத்திற்குப் பிறகு பக்தர்கள் பாதுகாப்பாக மலை இறங்க கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்புப் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.